Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இந்தியா முக்கிய ஏற்றுமதியாளராக மாறும்: பியூஷ் கோயல் நம்பிக்கை

இந்தியா முக்கிய ஏற்றுமதியாளராக மாறும்: பியூஷ் கோயல் நம்பிக்கை

சீனா, ஆசியான் பிராந்தியத்துக்குச் சரக்குகள், சேவைகளை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாக இந்தியா உருவெடுக்கும் என நம்புவதாக பியூஷ் கோயல் தெரிவித்தார்.

பகிரவும் WhatsApp Facebook

வரும் ஆண்டுகளில் சீனா மற்றும் ஆசியான் நாடுகளுக்கு சரக்குகள், சேவைகளை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார்.

நெதர்லாந்து நாட்டில் இரு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், ஹேக் நகரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கேமரூனின் யாவுண்டே நகரிலும், புதுதில்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இடையேயும் சீன வர்த்தக அமைச்சரைச் சந்தித்துப் பேசினேன். எல்லா நாடுகளுடனும் சுதந்திரமான, நியாயமான வர்த்தகத்தை ஊக்குவிக்க இந்தியா தயாராக உள்ளது.

சீனா நமக்கு முக்கியமான இடைநிலைப் பொருள்களையும் மூலப்பொருள்களையும் வழங்கி வருகிறது. ஏதேனும் ஒரு பொருளைப் பொறுத்தவரை நியாயமான போட்டி அல்லது விலை நிர்ணயம் முறையாக இல்லை என்று கண்டறிந்தால், அதற்கென நிறுவப்பட்ட சட்ட நடைமுறை பின்பற்றப்படும்.

மற்றபடி, நியாயமான போட்டி மற்றும் வெளிப்படையான வர்த்தக விதிகளில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். இந்தியாவின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விநியோகஸ்தர்களை வரவேற்கிறோம்.

பரஸ்பர அடிப்படையில் இந்தியப் பொருள்கள் மற்றும் சேவைகளுக்காகப் பல்வேறு நாடுகளின் சந்தைகளைத் திறக்க முயன்று வருகிறோம். வரும் ஆண்டுகளில் சீனா மற்றும் ஆசியான் பிராந்தியத்துக்குச் சரக்குகள், சேவைகளை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் உள்ளிட்ட முக்கிய இயந்திரங்களுக்குச் சீனா விதித்துள்ள புதிய ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் குறித்த கேள்விக்கு, “அது குறித்து நடவடிக்கை எடுப்போம்” என்று கோயல் பதிலளித்தார்.

வர்த்தக அமைச்சகத்தின் சமீபத்தைய தரவுகளின்படி, நடப்பு 2026–27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் இந்தியா–சீனா இருதரப்பு வர்த்தகம் சுமார் 29 சதவீதம் உயர்ந்து 9,176 கோடி அமெரிக்க டாலராக இருந்தது. முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில் அது 7,124 கோடி டாலராக இருந்தது.

2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இரு நாடுகளின் உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கிழக்கு லடாக் எல்லையில் நீடித்த மோதல் நிலை முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, 2024 அக்டோபரில் ரஷியாவின் கசான் நகரில் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்த பின்னர் உறவுகளைச் சீரமைக்கும் முயற்சிகள் தொடங்கின.

சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்து வருவது குறித்து இந்தியா தொடர்ந்து கவலை தெரிவித்து வருகிறது. இதனிடையே, சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் மீதான சீனா விதித்துள்ள கட்டுப்பாடுகள் இந்தியாவின் மெட்ரோ, அதிவேக ரயில் மற்றும் எல்லைப் பகுதி சுரங்கத் திட்டங்களைப் பாதிக்கக்கூடும்.

இந்தியாவுடன் நில எல்லையைப் பகிரும் நாடுகளுக்கான அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கை கடுமையாக்கப்பட்டுள்ளதால், சீன முதலீடுகள் தொடர்பாகவும் சிக்கல்கள் உள்ளன. கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட இருதரப்பு உறவுகளைச் சீரமைக்க இரு நாடுகளும் அண்மையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எல்லையில் அமைதியும் இயல்பு நிலையும் நீடிப்பதே உறவுகளின் வளர்ச்சிக்கு அடிப்படை என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

முந்தைய செய்தி
உலக திறன் போட்டியில் வென்றவர்களுக்கு முதல்வர் பாராட்டு
அடுத்த செய்தி
விவேகமான கடன் திட்டங்களைப் பின்பற்ற மாநிலங்களுக்கு அறிவுரை

தொடர்புடைய செய்திகள்